ஆஸ்திரேலியத் தூதர் தமிழ் மலருக்கு வருகை

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் பல இன சமூக அமைப்பைக் கொண்ட நாடுகள். ஓர் அரசாங்கத் தூதுவனாக மட்டுமல்லாமல் இந்த நாட்டிலுள்ள பல்வேறு இன சமூகங்களை அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் என் கடமைகளில் ஒன்றாகிறது. அந்த வகையில் தமிழ் மலர் நாளேட்டுக்கு நான் வந்ததில் பெருமையடைகிறேன் என்று மலேசியாவிற்கான ஆஸ்திரேலியத் தூதர் ஆன்ட்ரூ கொலேட்ஸிவ்னோஸ்கி கூறினார்.


நேற்று தமிழ் மலர் நாளேட்டுக்கு நல்லெண்ண வருகையை மேற்கொண்ட அவருக்கு தமிழ் மலர் குடும்பத்தினர் மிகச் சிறந்த வரவேற்பை வழங்கினர்.
தமிழ் மலர் நாளேட்டின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார். தமிழ் மலர் தலைமை நிர்வாகி டத்தோ எஸ்.எம்.பெரியசாமி வரவேற்புரையாற்றினார். தலைமையாசிரியர் டத்தோ எம்.இராஜன் தமிழ் மலரின் பணிகள், நோக்கங்கள், செயல்பாடுகள், அதன் பயணங்கள் குறித்து விளக்கினார்.

[soliloquy id="1935"]


தமிழ் மலர் சட்ட ஆலோசகர் வழக் கறிஞர் சரஸ்வதி கந்தசாமி தமிழ் மலர் நாளேடு இந்த நாட்டில் நடத்தியுள்ள சமுதாய போராட்டங்களையும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் களத்தில் சந்திக்கும் சவால்களையும் தூதருக்கு விரிவாக எடுத்துரைத்தார். பாராட்டை ஏற்றுக் கொண்டு பேசிய தூதர் கூறியதாவது:

இந்த நாட்டில் பல இனங்களையும் பற்றி அறிவதும் புரிவதும் என் பணியாகும்

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் பல்வேறு நிலைகளில் ஒரு சமநிலையான அரசியல் தன்மைகளைக் கொண்டவை. இரண்டுமே ஜனநாயக நாடுகள். சட்டப்பூர்வ அரசாட்சியைக் கொண்டவை. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக நல்லுறவு நிலவுகிறது. நமது தொடர்பு மொழி ஆங்கிலமாக இருக்கிறது. பொது சட்ட அமைப்பை நாம் கொண்டிருக்கிறோம்.
அழகான கடற்கரைகள், கங்காருகள், இயற்கை வளங்கள், எழில் காட்சிகள் இது மட்டும் ஆஸ்திரேலியாவின் பெருமை அல்ல. அடிப்படையில் ஆஸ்திரேலியா ஒரு குடிநுழைவு தேசம். அது மட்டுமல்ல, மாறுபட்ட இனங்களை, மதங்களைக் கொண்ட நாடு. இப்படி மலேசியாவும் ஒரு மாறுபட்ட இனங்களை உள்ளடக்கிய ஒரு தேசம். பல்வேறு இன கலாசாரங்களை உள்ளடக்கிய நாடுகள் வெற்றி பெற்றது அரிது. ஆனால், மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன.


ஓர் அரசாங்கத் தூதராக நான் இருந்தாலும் அந்தப் பணியை மட்டுமே கவனிப்பது என் வேலை அல்ல. இந்த நாட்டிலுள்ள மாறுபட்ட இனங்களை அவர்களின் பிரச்சினைகளை நான் அறிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்தியர்களுக்காக செயல்படும் தமிழ் மலர் நாளேட்டுக்கு வந்தமைக்கு நான் பெருமையடைகிறேன் என்றார் அவர்.
அவருடன் தூதரகத்தின் பொது உறவு அதிகாரி ஸகிடா சைட், தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் அலெக்ஸ் மனாஹன், பிரகாஷ் ஆகியோரும் வருகை புரிந்தனர். முன்னதாக தூதர் தமிழ் மலரின் எல்லா அலுவலகப் பிரிவுகளையும் நேரடியாக பார்வையிட்டு ஊழியர்களோடு அகம் மகிழ்ந்து உரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − three =