ஆலயத்தில் கைகலப்பு: விளக்கம் அளித்தார் ராமசாமி

0

கடந்த வாரம் செபெராங் பிறை ஆலயம் ஒன்றில் கைகலப்பில் போது, தாம் அங்கிருந்ததற்கான விளக்கத்தை பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.
தாம் ஆலயத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் இந்து அறவாரியக் குழுவினரைத் தாக்கினர் என தெரிவித்தார்.
கடந்த 24ஆம் தேதி, தாம் புக்கிட் மெர்தாஜம், புக்கிட் தெங்காவில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயத்துக்குச் சென்று அந்த ஆலயம் இந்து அறவாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக அறிவித்ததாகத் தெரிவித்தார்.
தமது குழுவினருடன் அங்கு சென்றபோது, ஆலயத்தின் வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே, அது வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்டது.
எங்களின் வருகையை எதிர்க்கும் ஆலயத்தின் முன்னாள் நிர்வாகக் குழுவினர் எங்களின் செய்கையை விரும்பாமல், அதில் ஒருவர் எங்கள் குழுவினர்களில் ஒருவரைத் தாக்கினார்.
அது சம்பந்தமாகப் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அந்தக் கும்பலின் 6 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதில் மேலும் இருவர் தேடப்படுகின்றனர் என ராமசாமி தெரிவித்தார்.
இந்து அறவாரியமானது மாநில அரசின் துணை அமைப்பாக வகை செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தை அறவாரியத்தின் கீழ் கொண்டுவர, அக்டோபர் 18ஆம் தேதி ஆட்சிக்குழுவிடம் மனு சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், அதனை மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது
நிர்வாகக் குளறுபடியால் சிக்கியிருக்கும் ஆலயங்களை அறவாரியத்தின் கீழ் கொண்டுவர 1906ஆம் ஆண்டு இந்து அறவாரியச் சட்டம் அனுமதியளிக்கிறது.
ராமசாமியும் அவரது குழுவினரும் கும்பலால் தாக்கப்பட்ட வீடியோ பதிவு வைரலாகப் பரவியுள்ளது. அதில், அறவாரியத்தின் செயலாளர் ஆர்.சுரேந்திரனை சிலர் தாக்கி, ஆலயத்துக்கு வெளியே இழுத்துச் சென்று, சுடும் சொற்களால் ஏசி, அங்கிருந்து போகச் சொல்லியிருந்தனர்.
அறவாரிய உறுப்பினர்கள் காலணி அணிந்து, ஆலயத்துக்குள் சென்றதால், முன்னாள் ஆலய நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை என தெரிகிறது. ஆயினும், அவர்கள் சென்ற பகுதி சீரமைப்புக்காக ஈராண்டுகளாக மூடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
பக்தர்களின் நன்கொடைகளை முறைகேடு செய்ததை அடுத்து, அந்த ஆலயத்தை அறவாரியத்தின் கீழ் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதாக ராமசாமி தெரிவித்தார்.
ஆலயம் சம்பந்தமான புகாரை மே மாதம் சங்கங்களின் பதிவதிகாரி விசாரித்து, அதன் பதிவினை ஆகஸ்டு மாதம் ரத்து செய்தார். புக்கிட் தெங்கா வட்டாரத்தில் உள்ள 250 பக்தர்கள் அந்த ஆலயத்தை இந்து அறவாரியம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை அனுப்பியிருந்தனர்.
புகார் தெரிவித்தோர் ஆலய சீரமைப்புக்காகப் பெறப்பட்ட 100,000 ரிங்கிட்டை ஆலய நிர்வாகத்தினர் முறைகேடு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − three =