ஆறுகள் தூய்மைக்கேடு பிரச்சினையைக் கையாளுவதற்கு விசாரணை ஆணையம் தேவை!

ஆறுகள் தூய்மைக்கேடு மற்றும் நாட்டின் நீர்பிடிப்பு இடங்களில் ஏற்பட்டிருக்கும் தூய்மைக்கேட்டிற்கான மூலகாரணங்களைக் கண்டறிய அரசாங்கம் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.
நீண்ட காலமாக இருக்கும் இந்த ஆற்று தூய்மைக்கேட்டு பிரச்சினையைக் களைவதற்கு அரசாங்கம் பரிந்துரைகளை முன்வைக்கவும்,கீழ் குறிப்பிடப்பட்ட விஷயங்களில் அவ்வாணையம் கவனம் செலுத்தவும் வேண்டும்.
ஆறுகள் மற்றும் அதன் மூலங்களை பாதுகாப்பதற்கு போதுமான சட்டங்கள் உள்ளனவா? மற்றும் அதன் தொடர்பான சட்டம் திறம்பட அமலாக்கம் செய்யப்படுகிறதா என்பது ஆராயப்பட வேண்டும்.
நதிகளை நிர்வகிக்கும் பொறுப்பினை ஒரு நிறுவனம் மட்டுமே கையிலெடுத்துக்கொண்டு அதற்கான சட்டதிட்டங்களை வகுக்க வேண்டுமா என்பது ஆராயப்பட வேண்டும்.
பொது தனியார் துறைகளில் நிலவும் ஊழல் காரணமாக நதிகளிலும் நீர்நிலைகளிலும் கழிவுகள் வீசப்படுவது அதிகரித்து வருவது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்று முகைதீன் மேலும் கூறினார்.
பிரச்சினைகளைக் களைவதற்குத் தனிப்பட்ட குழு நடவடிக்கை முறையை அரசாங்கம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அது உதவவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
இதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு தீர்வு தேவைப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும்பொழுது, அப்பிரச்சினையைக் கையாள எல்லா வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டாலும் இறுதியில் பலன் அளிக்கக்கூடிய செறிவான தீர்வுகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்று முகைதீன் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பிரச்சினையைக் கடுமையானதாகவே நோக்க வேண்டும். ஏனெனில் மலேசிய சுற்றுச்சூழல் தர அறிக்கை 2017ன்படி மேற்பார்வையிடப்பட்ட 477 ஆறுகளில் வெறும் 219 ஆறுகள் மட்டுமே (46ரூ) “தூய்மையானது” என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
207 ஆறுகள் “சிறிது தூய்மைக்கேட்டுக்கும்” (43ரூ), 51 ஆறுகள் (11ரூ), ‘தூய்மைக்கேட்டுக்கும்’ உள்ளாகியிருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் மலேசியாவில் மொத்தம் 25 ஆறுகள் முற்றிலும் அற்றுப்போன நிலையில் உள்ளதாக 2019ம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வறண்ட ஆறுகளில் 16 ஜொகூரிலும், 5 சிலாங்கூரிலும், 3 பினாங்கிலும், 1 மலாக்காவிலும் உள்ளன.
தொழிற்துறை, பட்டறை, குடியிருப்புப் பகுதிகள், கால்நடைப் பண்ணை மற்றும் வேளாண்நிலங்களில் வெளியாக்கப்படும் கழிவுகளே ஆறுகள் தூய்மைக்கேட்டுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
சுங்கை சிலாங்கூர் ஆறு தூய்மைக்கேட்டின் காரணமாக, செப்டம்பர் 2019 வரைக்கும் சிலாங்கூரின் சில பகுதிகள் எதிர்பாராத நான்கு நீர் விநியோகத் தட்டுப்பாட்டினை எதிர்நோக்கின.
மறுபடியும் இந்த வருடத்தில், ஒரு தொழிற்சாலைக் கழிவினால் ஆறுகள் நச்சுத்தன்மைக்குள்ளாகி கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் நான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் துண்டிப்பு ஏற்பட்டதால் 5 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை முகைதீன் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைச் சரி செய்ய அரசாங்கம் ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, தூய்மைக்கேட்டினை உண்டாக்குபவர்களுக்கு சுற்றுச்சூழல் இலாகாவிற்கு, அதன் சுற்றுச்சூழல் தர சட்டம் 1974ன் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு.
இதன் காரணத்தால், சட்டவிரோத அல்லது உரிமம் அல்லாத தொழிற்சாலைகள், சந்தைகள், உணவுக்கடைகள், புறம்போக்கிடங்கள் மீது சுற்றுச்சூழல் இலாகா எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.
ஆறுகள் மற்றும் நீர் பிடிப்பு இடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சட்ட அமலாக்கங்களை மேற்கொள்ள ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.
சட்டத்தை மீறுபவர்களை சிறைப்படுத்தவும், தூய்மைக்கேட்டுக்குக் காரணமான தொழிற்சாலை போன்ற இடங்களை இழுத்து மூடவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று முகைதீன் கூறினார்.
சுங்கை சிலாங்கூர் ஆற்று தூய்மைக்கேடு சம்பவம் தீவிரமாக ஆராயப்பட்டு, இதேபோன்ற இன்னுமொரு சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நம்முடைய நதிமூலங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் இந்த சம்பவத்தை ஒரு பாடமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலை 2014-ம் ஆண்டிலிருந்து உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதும், அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் எந்த வித நடவடிக்கையும் இதுகாறும் எடுக்காமல் இருந்து வருவதும் குழப்பத்தை அளிப்பதாக உள்ளது. மார்ச் 2020ல் சுங்கை கோங் ஆற்றில் நச்சுக்கழிவுகளை விட்டதற்காக இதே தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் இலாகா மவெ. 60,000 அபராதம் விதித்திருக்கிறது.
உரிமம் இல்லாத இந்த தொழிற்சாலையை இடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக அதன் உரிமையாளருக்கு இயக்க அனுமதிக்கான திட்டத்தை வழங்குவதற்கான 3 நாள் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
இவ்விடத்தில் அரசு அதிகாரிகளின் கடமை தவறுதலும் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று முகைதீன் வலியுறுத்தினார்.
சட்டப்பூர்வமாக்குதல் என்ற பெயரில் மாநில அரசாங்கங்கள் சட்டத்திற்கு விரோதமான தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது. இது தொடருமானால் சட்டத்திற்குப் புறம்பான தொழிற்சாலைகள் உருவாகுவதை இது ஆதரிப்பதாக அமைந்துவிடும்.
இது போன்ற தொழிற்சாலை உரிமையாளர்கள் கருப்பு பட்டியலிடப்பட்டு, அவர்களின் தொழிற்சாலை இயக்க உரிமை மனு நிராகரிப்பட்டு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையும் இடித்துத் தள்ளப்பட வேண்டும்.
ஆறுகள் தூய்மைக்கேட்டை தடுக்கும் பொருட்டு, தொழிற்சாலைகள் சிலாங்கூரின் முதன்மையான ஆறுகள் நெடுகிலும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று 2016ல் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிவித்திருந்ததை இங்கு நினைவுறுத்த விரும்புகிறோம். உண்மையில் எந்த தூய்மைக்கேடு நடவடிக்கைகளும் நீர் மூலங்களை நச்சுக்குள்ளாக்குவதால் அவற்றுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
2016ல் சிலாங்கூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 2,978 தொழிற்சாலைகளுக்கு ஊழல்தான் காரணமா என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆராய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் பத்திரிகைக்கு வழங்கிய அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =