ஆப்பிரிக்கா கண்டத்தில்
உகாண்டா தமிழர்கள்
– மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

ஆப்பிரிக்காவை உருண்டை உலகத்தின் இருண்ட கண்டம் என்று சொல்வார்கள். உண்மையில் அப்படி ஒன்றும் அது இருண்டு போய்க் கிடக்கவில்லை. இங்கே அடித்த வெயில் தான் அங்கேயும் அடித்தது. இங்கே பெய்த மழைதான் அங்கேயும் பெய்தது. இங்கே மேய்ந்த மாடுகள் தான் அங்கேயும் மேய்ந்தன. இங்கே வாழ்ந்த மக்கள் தான் அங்கேயும் வாழ்ந்தார்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போய்ப் பார்த்தால் மனித இனமே அங்கே தான் தோன்றி இருக்கிறது.

ஆக ஆப்பிரிக்கா என்கிற கண்டம் இல்லை என்றால் மனித இனம் என்கிற ஓர் இனம் தோன்றி இருக்குமா. தெரியவில்லை. ஹோமோ செபியன்ஸ் எனும் மனித இனம் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த மனித இனம் கால் நடையாக பொடி நடையாக நடந்து உலகம் பூராவும் பரவி இருக்கிறது. அந்த வகையில் இப்படி இந்தப் பக்கம் வந்தவர்கள் தான் மலாயா பூர்வீக மக்கள். பாவம். இப்போது மத வாதம் இனவாதத்தில் மாட்டிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் தவிக்கிறார்கள்.

நேற்று படகு ஏறி வந்தவர்கள் சிலரும் பலரும் அவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது. வந்தேறி எனும் சொல்லுக்கே விவஸ்தை இல்லாமல் போய் விட்டது. மன்னிக்கவும். கட்டுரை பாதை மாறி போகிறது. எல்லாம் வயிற்றெரிச்சலின் குமுறல்கள் தான்.

ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உள்ளே ஆயிரம் ஆயிரம் மர்மங்கள். ஆயிரம் ஆயிரம் கதைகள். அவற்றில் ஒரு கதை தான் உகாண்டா தமிழர்களின் கதை.

உகாண்டா நாட்டில் கம்பிச் சடக்குகள் போடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாரிசுகளில் ஒரு பகுதியினர் தான் இப்போதைய உகாண்டா தமிழர்கள்.

உகாண்டாவில் இரயில் பாதை வேலை முடிந்து வீடு திரும்பிய தமிழர்கள் பலர். வீடு திரும்பாமல் அங்கே உகாண்டாவிலேயே தங்கி விட்டவர்கள் சிலர். அவர்களைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தவிர இடைப்பட்ட காலத்தில் அதாவது 1950; 1960-ஆம் ஆண்டுகளில் உகாண்டாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் இன்றைய இரண்டாம் மூன்றாம் தலைமுறை வாரிசுகளையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.

1895-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா – உகாண்டா இரயில் பாதை (South Africa-Uganda Railway) போடப் பட்டது. அதற்கு உகாண்டா இரயில்வே என்று பெயர். 1,060 கி.மீ (660 மைல்) நீளம். அந்தப் பாதையில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான இந்தியர்கள் அழைத்துச் செல்லப் பட்டார்கள். மொத்தம் 35,729 தொழிலாளர்கள். பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தின் கராச்சி, லாகூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் இருந்து 6,445 தமிழர்கள் போய் இருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் மூன்று ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு பன்னிரண்டு ரூபாய் சம்பளம். இலவசமாக உணவுப் பங்கீடுகள் (ரேசன்கள்). உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் போய் தங்கினால் அரை நாள் ஊதியம். இலவச மருத்துவச் சேவை.

1895 டிசம்பர் மாதம் தொடங்கி 1901 மார்ச் மாதம் வரையில் இந்தியாவில் ஆள்சேர்ப்பு நடந்தது. 1899-ஆம் ஆண்டில் அவர்களின் ஒப்பந்தங்கள் முடிவு அடைந்தன. முதன்முதலாகப் போன தமிழர்கள் பலர் இந்தியா திரும்பினார்கள். ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டதால், ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் திரும்பி வர முடியாத நிலை. மலாயாவை விட உகாண்டாவில் நிலைமை மேலும் மோசம்.

1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உகாண்டா உள்ளூர் பூர்வீக மக்கள் (Nandi people) இரயில் பாதை போடும் தொழிலாளர்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தார்கள். அவர்களின் நிலத்தில் இரயில் பாதை ஊடுருவிச் செல்வதால் அவர்களுக்கு ஆதங்கம்.

அவர்களுக்கு கொய்தலெல் அராப் சமோய் (Koitalel Arap Samoei) என்பவர் தலைவராக இருந்தார். அவரை வெள்ளைக்காரர்கள் சுட்டுக் கொன்றர்கள். அதன் பிற்கு தான் தொல்லைகள் அடங்கின.

இரயில் பாதை போடும் போது இறந்த இந்தியர்கள்; தமிழர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் சேர்க்க வேண்டும். 1895-ஆம் ஆண்டு தொடங்கி 1903-ஆம் ஆண்டு வரையில் ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 357 பேர் இறந்து இருக்கிறார்கள். இதில் 30 விழுக்காடு தமிழர்கள்.

உகாண்டா இரயில் பாதை கட்டுமானத்தில் 2,493 தொழிலாளர்கள் இறந்து இருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த பெரும்பாலான இந்தியர்கள் தாயகம் திரும்பினார்கள். இருப்பினும் 6,724 பேர் உகாண்டாவிலேயே தங்கி விட்டார்கள்.

தாயகம் திரும்பாமல் உகாண்டாவில் தங்கிய தமிழர்கள் 845 பேர். இவர்கள் தான் உகாண்டாவில் தமிழர்கள் சமூகத்தை உருவாக்கியவர்கள். சிரம் தாழ்த்துவோம்.

இரயில் பாதை கட்டுமானத்தில் தமிழர்கள் பலரைச் சிங்கங்கள் அடித்துக் கொன்று இருக்கின்றன. ஒரு செருகல். மலாயா இரயில் பாதை கட்டுமானத்தில் தமிழர்களைப் புலிகள் அடித்துக் கொன்றன. யானைகள் மிதித்துக் கொன்றன. கரடிகள் கரண்டி விட்டுப் போயின. அங்கே உகாண்டாவில் சிங்கங்கள் கடித்துக் குதறிவிட்டுப் போய் இருக்கின்றன.

உலகின் பல நாடுகளின் உள்கட்டமைப்புகளில் தமிழர்கள் பெரும் பங்காற்றி உள்ளார்கள். மலாயாவை எடுத்துக் கொள்ளுங்கள். அலோர் ஸ்டாரில் இருந்து ஜொகூர் பாரு வரையில் இரயில் பாதை போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஜொகூர் பாரு நகரில் இருந்து சிங்கப்பூருக்கு இரயில் பாதை போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். அடுத்து கிம்மாஸ் நகரில் இருந்து கோத்தா பாரு வரையில் இரயில் பாதை போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.

மலாயாவின் முதல் இரயில் பாதை 135 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப் பட்டது. அந்த முதல் இரயில் பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்களும் தமிழர்கள் தான்.

கடைசியில் அவர்களுக்கு என்ன பெயர். வந்தேறிகள். ஆடாய் மாடாய் உழைத்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வந்தேறிகள் எனும் பட்டப் பெயர். அப்படி அழைப்பதற்கு வெட்கமாக இல்லை. இதுவா நன்றிக்கடன். இதுவா மனித நேயம்.

உகாண்டா இரயில் பாதை போடும் போது இரண்டு சிங்கங்களின் அராஜகம் தலைவிரித்தாடி இருக்கிறது. அந்தச் சிங்கங்களுக்கு சாவோ சாப்பாட்டு ராமன்கள் (Tsavo Man-Eaters) என்று பெயர். குறைந்தது 58 இந்தியர் தொழிலாளர்களைக் கொன்று இருக்கின்றன.

தமிழர்கள் சிலரும் இறந்து இருக்கிறார்கள். தொழிலாளர்கள் தங்கி இருக்கும் முகாமிற்குள் நுழைந்து அட்டகாசங்கள் செய்து இருக்கின்ரன. கடைசியில் ஒரு வழியாக அவற்றைச் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

உகாண்டா நாட்டைப் பற்றி சின்னத் தகவல். உகாண்டா நாடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் எல்லைகளாக்க கிழக்கே கென்யா. வடக்கே சூடான். மேற்கே காங்கோ. தென்மேற்கே ருவாண்டா. தெற்கே தான்சானியா. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா. மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர். மலேசியாவில் மூன்றில் இரு பகுதி.

உகாண்டாவில் தற்சமயம் 15,000 இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் தமிழர்கள் 3,200 பேர். 130 ஆண்டுகளுக்கு முன்னால் இரயில் பாதை போட போன தமிழர்களின் வாரிசுகள். நல்லபடியாக வாழ்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், 1972-ஆம் ஆண்டில் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன் (காட்டுமிராண்டித் தலைவர்) ஆசிய நாட்டு மக்களை அந்த நாட்டில் இருந்து விரட்டி அடித்தார். 80,000 இந்தியர்கள் நிர்கதி ஆனார்கள். பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினர்.

உகாண்டா மக்களுக்கு இந்திய வணிகர்கள் மீது எப்போதுமே வெறுப்புணர்ச்சி. அவர்களின் பணம் காசு எல்லாவற்றையும் இந்தியர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு. அதனால் இடி அமீன் ஆசியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.

பலர் பக்கத்து நாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். சிலர் அங்கேயே இருந்தார்கள். ஏறக்குறைய 20 ஆயிரம் பேர். அவர்களில் தமிழர்களும் அடங்குவார்கள். 1980-ஆம் ஆண்டுகளில் இடி அமீன் ஆட்சி முடிவுக்கு வந்ததும், பலர் மீண்டும் திரும்பி வந்தார்கள்.

உகாண்டா நாட்டின் மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒரே ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு தான். இருந்த போதிலும், அவர்கள் தான் அந்த நாட்டின் வரி வருவாயில் 65 விழுக்காடு வரை பங்களிப்புச் செய்கிறார்கள். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். இங்கே இந்தப் பக்கமும் அதே கேஸ் தானே. அப்புறம் எப்படி.

உகாண்டாவில் ஆகப் பெரிய பணக்காரர் ஓர் இந்தியர். பெயர் சுதீர் ரூபரேலியா (Sudhir Ruparelia). 1 பில்லியன் டாலர் சொத்துகளுக்கு உரிமையாளர். இதை வேண்டும் என்றால் இது எப்படி இருக்கு என்று கேட்கலாம். தப்பு இல்லை.

இப்போதைய உகாண்டா தமிழர்கள் சிறு வியாபாரங்கள்; தொழில்நுட்பத் துறைகள்; ஆசிரியர்கள்; குத்தகை வேலைகள்; கடை கண்ணிகள் வைத்துக் கொண்டு ஓரளவிற்கு நல்லபடியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு சங்கம் உள்ளது. அதன் பெயர் உகாண்டா தமிழர் சங்கம். தமிழர் விழக்ககளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். அண்மையில்கூட பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். உகாண்டா தமிழர்களுக்கு மரியாதை செய்வோம்.

சான்றுகள்:

  1. Patel, Hasu H. (1972), “General Amin and the Indian Exodus from Uganda”, Issue: A Journal of Opinion, 2 (4): 12–22
  2. Cohen, Ronald Lee, 1944- (1997). Global diasporas: an introduction. University of Washington Press.
  3. http://ugandatamilan.blogspot.com/2018/01/uga-tamil-sangam-pongal-function-2018.html
  4. https://en.wikipedia.org/wiki/Uganda_Railway
  5. Ember, Melvin (30 November 2004). Encyclopedia of Diasporas: Immigrant and Refugee Cultures Around the World. Volume II: Diaspora Communities.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here