ஆதிசங்கரர் இணைக்கட்டட வளர்ச்சிக்கு ஓம்ஸ் தியாகராஜன் வெ.50,000 நிதி

0

மாணவர்களிடையே இளம் பருவத்திலேயே சமய ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு வரும் மலேசியாவின் முதல் ஆதிசங்கரர் திருமடத்தின் இணைக்கட்டட வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு ஓம்ஸ் அறவாரியம், தனது பங்களிப்பாக 50,000 வெள்ளியை நிதியாக வழங்கியது.

கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி திருமடத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு பின்னர் வெற்றிகரமாக கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பள்ளி விடுமுறைக்காலங்களில் மாணவர்கள் பயனற்ற வழியில் தங்களின் பொழுதை கழிக்கக்கூடாது என்கிற வகையில் அவர்களை அழைத்து 5 நாட்கள் தங்க வைத்து சமயம் குறித்த போதனைகள் கற்றுத் தரப்பட்டு வந்தது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரத்தியேகமாக சமய வகுப்பும் நடைபெற்று வருவதாக ஆதிசங்கரர் திருமடத்தின் தோற்றுநர் சுவாமி மகேந்திரர் தெரிவித்தார்.திருமடத்தின் சமய சேவையை உணர்ந்து இங்குள்ள சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை சமய கல்வி பயில்வதற்காக அனுப்பி வைத்தனர். அதனால் திருமடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது அருகிலேயே சுமார் 15 லட்சம் வெள்ளி செலவில் 3 மாடி இணைக்கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாத காலத்திற்குள் இதற்கான நிர்மாணிப்புப் பணிகள் முற்றுப்பெற்றுவிடும் என்றார் அவர்.
இதனிடையே, தீபாவளிக்கு முன்னதாக திருமடத்தின் நிர்வாகத்தார் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு வருகை புரிந்திருந்த ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ்.பா.தியாகராஜன், திருமடத்தின் சமய வளர்ச்சிக்கு தாமும் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதி கூறியிருந்தார்.

அதன் பொருட்டு நேற்று அவரின் சார்பிலும் ஓம்ஸ் அறவாரியத்தின் சார்பிலும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடினின் இந்தியர் நல சிறப்பதிகாரியும் நகராண்மைக் கழக உறுப்பினரும் இவ்வட்டார சமூக சேவையாளருமான நல்லன், 50,000 வெள்ளிக்கான காசோலையை என்னிடம் ஒப்படைத்தார். அவருடன் ஓம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி லெட்சுமிகாந்தன் கிருஷ்ணராஜும் உடன் கலந்து கொண்டார்.

செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் கல்வியோடு சேர்த்து சமய போதனைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். அது அவர்களை ஒழுக்கச்சீலர்களாக உருமாற்றும் என்ற நம்பிக்கையில் இந்த நிதியை வழங்கியுள்ளார். அவரின் கனவை ஆதிசங்கரர் திருமடம் நிச்சயம் நனவாக்கும் என்று கூறிய சுவாமி மகேந்திரர், அவருக்கும் ஓம்ஸ் அறவாரியத்துக்கும் தமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த இணைக் கட்டட வளர்ச்சிக்காக பல நல்ல உள்ளங்கள் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அதில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் அதன் தலைமை நிர்வாகி டத்தோ பா.சகாதேவனும் பெரிய அளவிலான நிதியையும் வழங்கியுள்ளனர்.

இது போன்ற பொதுநலம் சார்ந்த அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தால் வருங்காலத்தில் குற்றமற்ற சமுதாயமாக நம் இந்திய சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று இந்நிகழ்வுக்குப் பின்னர் லெட்சுமிகாந்தன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − seventeen =