ஆசை காட்டி மோசம் செய்யும் போலி தரகர்கள்

மலேசியாவில் வேலை செய்து நன்றாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இந்தியர்களை ஏமாற்றும் கள்ளத் தரகர்களின் அட்டூழியம் இன்னும் ஓயவில்லை. அந்த வகையில் மெருகுனிஷா என்ற தமிழ் நாட்டுப் பெண் இந்த ஆசாமிகளின் வலையில் சிக்கியிருக்கிறார்.
இவர் கடந்த 27.2.2019ல் மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். எழுதப்படிக்கத் தெரியாத நிலையில், கணவனை இழந்து, வெளி உலகம் அறியாத அபலைப் பெண்ணான இவர் சட்ட நுணுக்கங்களை அறிந்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக விசாவில் வருகிறவர்கள் 15 நாட்களுக்கு மேல் நாட்டில் தங்க முடியாது என்ற விபரம் கூட தெரியாமல் யாரோ ஒருவர் பேச்சைக் கேட்டு ‘மீராம் பாய்’ என்று அடையாளம் கூறப்பட்ட ஒரு கள்ளத் தரகரை நம்பி மலேசியா வந்திருக்கிறார். மீராம் பாய் அவரிடம் எந்தக் காசும் வாங்கவில்லையாம்.
மலேசியாவில் உள்ள இன்னொரு கள்ளத் தரகரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ‘பிரேமா’ என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட இவரும் பணம் வாங்கவில்லை. இப்படிப் பணம் வாங்காமலேயே ஒரு கள்ளக் கும்பல் செயல்பட முடியுமா? – ஏதாவது ஒரு முதலாளியிடம் இந்த ஆசாமிகள் நம்பி வருகிறவர்களைக் கொள்ளை லாபத்துக்கு விற்று விடுகிறார்கள். அந்த முதலாளிமார்கள் இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பணத்தைக் கள்ளத் தரகர்களுக்கு வழங்கி விடுகின்றனர். இவர்கள் தொழிலாளர்களைத் தருவிக்கும் லைசென்ஸ் கூட வைத்திருப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஹிங்யாவில் இருந்து மக்களைக் கடத்திக் கொண்டு வந்து இங்கு மனித வணிகம் செய்வது போல் இந்த ஆசாமிகள் செயல்படுகின்றனர்.
இவரைத் தமிழ் மலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்த மலேசிய உலக மனித நேயம் என்ற இயக்கத்தின் தலைவர் த.கமலநாதன், இப்படி அழைத்து வரப்படும் தொழி லாளர்கள் சுங்கத் துறையில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய கைரேகைகூட பதிய வைப்பதில்லை என்று கூறுகிறார். இதன் அடிப்படை யில் சுங்கத் துறை அதிகாரி களும் பணத்துக்காக சோரம் போகிறார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது.


இந்தப் பெண் ஜொகூரில் ஓர் இந்தியர் வீட்டில் 3 மாதமாகவும், இன்னொரு இந்தியக் குடும்பத்தில் 7 மாதமாகவும் மொத்தம் 10 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலைசெய்திருக்கிறார். சம்பளப் பணத்தைக் கேட்டால், ‘ஏஜெண்டுகளுக்கு ஃபீஸ் கொடுக்கச் செலவாகி விட்டது’ என்று தட்டிக் கழித்திருக்கிறார்கள் அந்த முதலாளிமார்கள். அந்தக் கொடுமையை யாரிடமாவது புகார் செய்தால், அடி உதை கிடைக்கும் என்று வேறு சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில் கிள்ளானில் உள்ள இன்னொரு முதலாளிக்கு இவரை பிரேமா விற்றிருக்கிறார். அங்கு 2 மாதங்களாக வேலை செய்து கொண்டிருந்த போது, தமிழ் நாட்டில் உள்ள அவருடைய மகள் தாயின் துயரம் அறிந்து கமலநாதனின் உதவியை நாடி யிருக்கிறார். கமலநாதனின் துரித நடவடிக்கை மூலம் அப்பெண்ணை மீட்டிருப்ப தோடு, அவருடைய 2 மாதச் சம்பளத்தையும் கடப்பிதழை யும் பெற்றுத் தந்துள்ளார். அத்தோடு தென் கிள்ளானில் உள்ள காவல் நிலையத்தில் காலை 11.00 மணியளவில் புகார் செய்துள்ளார். இன்னும் கமலநாதனுக்கு எஞ்சியிருக் கும் பொறுப்பு, மெருகுனி ஷாவை அவருடைய தாயகத் துக்கு அனுப்ப வேண்டியது தான்.
மேலும் பேசிய கமலநாதன், இது போன்று வஞ்சிக்கப்படுகிற பல தமிழ் நாட்டவர்கள் தன் உதவி நாடி வருவதாகக் கூறினார். மேலும் கள்ளத் தரகர்களிடம் சிக்கி தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்குபவர்கள் அல்லது அதன் விபரம் அறிந்தவர்கள் 016-9744404 என்ற தனது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளு மாறு கமலநாதன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 3 =