அஸ்மின் அலி எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போடக்கூடாது!

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று அஸ்மின் அலி பிதற்றியிருப்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலின் கையாலாகாத தனத்தை மறைக்கவே எதிர்க்கட்சிகளைப் பலிகடாவாக ஆக்க அவர் முனைவதாக சார்ல்ஸ் குற்றம் சாட்டினார்.
சபாவின் சட்டப்பூர்வ ஆட்சியைக் கைப்பற்ற கட்சி தாவலை ஊக்குவித்து, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது பிரதமர் முஹிடினும் அஸ்மின் அலியும்தான்.
அங்கு மாநிலத் தேர்தல் நடந்தபோது பெரும்பாலான அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட பின்னரே கோவிட்-19 தொற்று அதிகமாகி அச்சத்தை எற்படுத்தியதற்கு எதிர்க்கட்சிகள் காரணமில்லை. மாறாக அஸ்மின் அலி சார்ந்த ஆளும் கூட்டணிதான்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கலைக்க ஷெரட்டன் நகர்வை ஏற்பாடு செய்தது யார்? அஸ்மின் அலிதானே? அதன் பின்னர், ஆட்சியைக் கைப்பற்றி, அதனைத் தற்காக்கவும் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளவுமே அவசரகாலத்தைப் பிரகடனப் படுத்த முனைவது யார்? எதிர்க்கட்சிகளா அல்லது ஆளும் கூட்டணியா?
அவசரகாலத்தை அறிவிக்க முஹிடின் ஆளாய் பறக்கிறார். அதனை அஸ்மின் அலி ஆதரிக்கிறார். அது கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அல்ல. மாறாக நாடாளுமன்றத்தை முடக்கி, சர்வாதிகார ஆட்சியை அமைத்து மனம்போன போக்கில் ஆட்சியை நடத்தவே என்றும் சார்ல்ஸ் சுட்டிக்காட்டினார்.
அவசரகாலத்தில் ஜனநாயகம் முடக்கப்படும். நாடாளுமன்றம் செயல்படாது. பொருளாதாரம் சரியும். முதலீடு சரியும். மக்கள் வேலை இழப்பர். வாழ்க்கைச் சுமை அதிகரிக்கும். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கோவிட்-19ஆல் மக்கள் படும் துயரம் போதும். அப்படி எல்லாம் நடந்தால் அதற்கு எதிர்க்கட்சிகளை அஸ்மின் அலி குற்றம் சொல்லக்கூடாது. தம்மையும், பிரதமரையும் ஆளும் கூட்டணியையும்தான் அவர் குறை சொல்லிக் கொள்ள வேண்டுமென்று சார்ல்ஸ் சந்தியாகோ சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − one =