அஸாமை இடைநீக்கம் செய்யக! நாடாளுமன்றத்தை நோக்கி பிகேஆர் இளைஞர்கள் பேரணி!


மலேசிய லஞ்சஊழல்
தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் அஸாம் பாக்கியை அப்பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யக் கோரி பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நேற்று அணிவகுத்துச் சென்றனர்.இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் நஸீரின் தலைமையில் சென்ற அந்த உறுப்பினர்கள்,பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் மக்களவைச் சபாநாயகர் அஸார் ஹரூண் ஆகியோரிடம் கோரிக்கை மனுவைக் கொடுப்பதற்காக நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு கூடினர்.
குழுவொன்றை நியமிப்பது ஆகியவை உள்ளிட்ட எட்டு கோரிக்கைகள் அம்மனுவில் இடம்பெற்றுள்ளன.
லஞ்ச ஊழலைத் தடுப்பதற்காக எம்ஏசிசி சட்டத்தில் திருத்தம் செய்வது, தேர்தல் ஆணையம், மலேசிய மனித உரிமைகள் ஆணையம் ( சுஹாகாம்) ஆகியவற்றை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வருவது, ஊழல்களை அம்பலப்படுத்தும் நபர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது ஆகிய கோரிக்கைகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
எம்ஏசிசி ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்புமுறை தொடர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. எனவே, நாம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று செய்தியாளர்களிடம் அக்மால் தெரிவித்தார்.
அந்த கோரிக்கை மனுவுக்கு இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர் அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் அவர் சொன்னார்.
நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாமும் அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் இக்கோரிக்கைகளை எழுப்ப போவதாக குறிப்பிட்டார்.
நமது நாட்டில் லஞ்சஊழல் ஒரு தொற்றுநோய்போல் பரவி வருகிறது. அது திட்டமிட்டமுறையிலும் நடந்து வருகிறது. அதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லையெனில், முழு அரசு நிர்வாகமும் வீழ்ச்சியடைய நேரிடலாம் என்றார் அன்வார்.
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், பெட்டாலிங் ஜெயா நடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஃபுஸ் ஒமார், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி ஃபாட்ஸில், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோரும் அன்வாருடன் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + eight =