
ஊழியர்கள் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்) சந்தாதாரர்கள் சிறப்பு பணமீட்புத் திட்டத்தின் வாயிலாக தங்கள் சேமிப்புத்தொகையை மீட்க அரசாங்கம் நேற்று இணக்கம் தெரிவித்தது.
அச்சிறப்புத் திட்டத்தின் வாயிலாக பத்தாயிரம் வெள்ளியை அவர்கள் மீட்கலாம் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். அந்த பணமீட்பு பற்றிய மேல்விவரங்களை நிதியமைச்சும் இபிஎப் வாரியமும் விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் முதிய வயதுக் காலத்திற்குத் தேவைப்படும் இபிஎப் சேமிப்புத்தொகையை மீண்டும் ஒரு தடவை மீட்டுக் கொள்ள அரசாங்கம் கனத்த மனத்துடன்தான் முடிவு செய்தது என்றும் அவர் சொன்னார்.
அவசரத் தேவைகளுக்கும் எதிர்காலச் சேமிப்புக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த பணமீட்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய மீட்சிக் கட்டத்தில் விரிவாக நடத்தப்பட்ட ஆய்வில் பல குடும்பங்கள் இன்னும் சிரமத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது என்றார்.
தங்களின் சிரமத்தைப் போக்க இபிஎப் பணத்தை மீட்க அனுமதிக்கும்படி பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கைகளை நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆராய்ந்த பிறகு சிறப்புப் பணமீட்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
இபிஎப் நிதியிலிருந்து பத்தாயிரம் வெள்ளியை மீட்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்தாலும், அவசரத் தேவைகளுக்கு அல்லாமல் பணத்தை சந்தாதாரர்கள் மீட்கக்கூடாது. முடிந்த வரையில் சேமிப்புத் தொகையை அவர்கள் தொடர்ந்து பராமரித்து வரவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அரசாங்கம் இதற்குமுன்னர் ஐ-லெஸ்தாரி, ஐ-சினார், ஐ-சித்ரா ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் இபிஎப் பணத்தை மீட்க அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் மூலம் எழுபத்து மூன்று லட்சத்து நாற்பதாயிரம் சந்தாதாரர்கள் மொத்தம் 10,100 கோடி வெள்ளியை மீட்டிருந்தனர். ஈராண்டுகளுக்கு முன்பு கோவிட்-19 பெருந்தொற்று நாட்டைத் தாக்கத் தொடங்கிய பிறகு பணமீட்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.