
நாடு முழுமையிலும் அவசரகாலத்தை அறிவித்துள்ள அரசை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வழக்கைத் தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவசரகால அறிவிப்பானது பொறுப்பற்றது, ஆற்றாமையால் அறிவிக்கப்பட்டது, அடிப்படை காரணமில்லாதது, அது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதால் அவசரகாலப் பிரகடனம் தேவையற்றது என்று தாம் கருதுவதால், அரசை நீதிமன்றத்திற்கு இழுக்க முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வழக்கைத் தாக்கல் செய்ய, தமது வழக்கறிஞர் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றினைக் காரணம் காட்டி, முஹிடின் யாசினின் பரிந்துரையின் பேரில், பேரரசர் அவசரகாலத்தைப் பிரகடனத்தை செவ்வாயன்று அறிவித்தார். அவசரகாலத்தை அறிவித்த முதல் நாள், எம்சிஓ அறிவிக்கப்பட்டது. முஹிடின் தமது அறிவிப்பில், தம்மை நம்பும்படியும் கேட்டுக் கொண்டது சந்தேகத்தை எழுப்புவதாக அன்வார் குறிப்பிட்டார்.துன் மகாதீருக்கு துரோகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய முஹிடின், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லை. நாட்டை சிறப்பாக வழி நடத்த சிறந்த தலைமைத்துவப் பண்புகள், நிர்வாக நடைமுறை, மக்களின் நம்பிக்கை அவசியம் தேவை. ஆனால், இவை யாவும் அவரிடம் இல்லை.
நெருக்கடியான நேரத்தில் மக்களுக்குத் தேவையானது, வெளிப்படைத் தன்மை, உறுதிப்பாடு, முறையான திட்டமிடலே ஆகும். ஆனால், இவை யாவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மக்கள் தியாகம் செய்ய வேண்டுமென்று முஹிடின் அறைகூவல் விடுவது வேடிக்கையாக இருப்பதாகவும் அது அவர் சார்ந்த அரசியல் தலைவர்களிடம் இல்லையென்றும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 தொற்றினை ஒழிக்க பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதோடு வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை அணுக்கமாகப் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.