
இங்கு, செராஸ் பாண்டான் இண்டா பொது மண்டபத்தில் நாடு தழுவிய நிலையில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு வெற்றிக்கோப்பையும் நற்சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றது. புறநகர்ப் பள்ளியாக இருந்தாலும் அறிவியல் புத்தாக்கத்துறையில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, இந்தோனேசியா, தைவான், குரோஷியா, தாய்லாந்து, சீனா போன்ற கடல் கடந்த நாடுகளில் அதிகமான தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் கணேஷ் ராமசாமிக்கும் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதாக இந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். இந்தச் சாதனைகள் தொடர வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
பல நாடுகளுக்குச் சென்று சிறப்பு விருதுகளையும் சாதனைகளையும் படைத்ததற்காக தனது 10 மாணவர்களுடன் அப்பள்ளி தலைமையாசிரியர் கணேஷ் சிறப்பு விருதுக்கான வெற்றிக் கோப்பையையும், நற்சான்றிதழையும் இந்நிகழ்ச்சியில் துணைப்பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பனிச்சறுக்குப் பாவை ஸ்ரீ அபிராமி, கராத்தே வீராங்கனை நிஷா, உலக சாம்பியன் சுரேஷ், நீர் ராக்கெட்டை அதிக உயரம் பறக்கச் செய்த விஷான் போன்றோர் துணைப்பிரதமரிடம் இருந்து தங்களின் சாதனைக்கான சிறப்பு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.