‘அரசியல் தவளைகளை’ ஏற்றுக் கொள்ளக் கூடாது

மலாக்காவின் முன்னாள் முதலமைச்சர் இட்ரிஸ் ஹரூண் மற்றும் இதர மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற பிரச்சினைக்குரிய அரசியல் தவளைகளுடன் கைகோத்துக் கொண்டு குறுக்குவழியில் மாநில அரசைக் கைப்பற்றும் ஆபத்தான செயலில் ஈடுபடக்கூடாது என்று பிகேஆர் கட்சியை ரபிஸி ரம்லி எச்சரித்துள்ளார். அந்நபர்கள் கட்சி தாவிய காரணத்தால்தான் தேசிய முன்னணியின் தலைமையிலான மலாக்கா அரசாங்கம் கவிழ வேண்டி வந்தது. இதனால், நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ரபிஸி தமது முகநூல் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார். இட்ரிஸூம் இதர மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் வரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தின்கீழ் போட்டியிடும் நோக்கத்தில் பிகேஆர் கட்சியுடன் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அது குறித்து கருத்துரைத்தபோதே ரபிஸி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசியல் அதிகாரத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றின் அரசியல்வாதிகளிடையே நடைபெற்ற போராட்டத்தினால் ஏற்கெனவே கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சிரமத்திற்குத் தள்ளப்பட்டனர். அது மட்டுமன்றி அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நற்பெயரும் கிடையாது. அவர்களுள் சிலர் மற்றவர்களை அவமானப்படுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய நபர்களை மக்களின் முன்பு வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு நாம் முன்வரக்கூடாது என்றும் அவர் ரபிஸி வலியுறுத்தினார். மலாக்கா அரசாங்கத்தை எந்த வகையிலாவது கைப்பற்ற வேண்டும் என்று சில பிகேஆர் அரசியல்வாதிகள் ஒற்றைக் காலில் நிற்கின்றனர். அதற்கு குறுக்குவழியை அவர்கள் மேற்கொள்ளக்கூடாது என்றார் அவர். சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரூண், பெங்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோரிஸாம் ஹசான் பாக்தி, தெலுக் மாஸ் சட்டமன்ற உறுப்பினர் நூர் அஃபாண்டி அமாட் மற்றும் பந்தாய் குண்டோர் சட்டமன்ற உறுப்பினர் நோர் அஸ்மான் ஹசான் ஆகியோரே சம்பந்தப்பட்ட அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். அந்நால்வரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் சின்னத்தின்கீழ் வேட்பாளர்களாக நிற்க பிகேஆர் கட்சித் தலைவர்களிடம் பேச்சு நடத்தி வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது. இட்ரிஸூம் நோர் அஸ்மானும் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நூர் அஃபாண்டியின் உறுப்பியத்தை பெர்சத்து கட்சி துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 10 =