
அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நபர்கள் மீது மானநட்ட வழக்கு களைத் தாக்கல் செய்ய முடியுமா என கூட்டரசு நீதிமன்றம் விளக்க மளிக்க வேண்டுமென கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் மசீச தம் மீது தொடுத்த வழக்கை எதிர்கொள்ள, அதற்கான பதில் தமக்குத் தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார். 2016 மார்ச் 15இல், லிம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், மசீச சொந்தப் பணத்திலிருந்து சீனப் பள்ளிகளுக்கு உதவி செய் யவில்லை, அது பொதுமக்களின் நிதியிலிருந்துதான் அதனைச் செய்ததாகவும், மசீச பொதுமக்களின் பணத்தைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், அது சீனப் பள்ளி களின் கல்வி மேம்பாட்டில் எவ்வ ளவு பணத்தைச் செலவிட்டது, அதன் சொத்துகள் எவ்வளவு என்பதைப் பொதுவில் அறிவிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து, 2017 ஜூலையில் மசீசவின் தலைமைச் செயலாளர் ஓங் கா திங், லிம் லிப் எங் மீது இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மசீசவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பதால் லிம், கட்சிக்கு 10 கோடி ரிங்கிட் இழப்பீடு தர வேண்டுமென்று தமது வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மார்ச் 19ஆம் தேதி 4 நாள்களுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரொஸானா அலி யூசோப் முன்னிலையில் செவிமடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை மசீச தம்மீது தொடுக்க முகாந்திரம் இருக்கின்றதா என்பதை அறிய, கூட்டரசு நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டுமென லிம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இதே கோரிக்கையை மேல் முறையீட்டு நீதிமன்றம் இதற்கு முன்னர் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.