அரசாங்கம் இந்தியர்களை கைவிட்டதா?

0

பினாங்கு, ஏப் 1- தன்னுடைய பிரஜைகளை தன் நாட்டிற்கு கொண்டுவருவது அரசாங்கத்தின் கடமையாகும்.ஆனால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க மஇகா முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அமலாக்க முறையிலும் அரசு கடப்பாடு என்ற முறையிலும் இது தவறாகும்.
அரசாங்கம் நினைத்தால் உடனே அரசாணை அடிப்படையில் அனைத்துப் பயணிகளையும் இராணுவம் அல்லது தனி முயற்சியில் கொண்டு வந்திருக்கலாம். இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் பயணிகள் தொடர்பான விவகாரத்தில் மட்டும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு ஏன் என்று அவர் வினவினார்.
தத்தம் கட்சிகளே மக்களின் தலைவிதியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் மசீச யாரையும், எந்த நாட்டில் இருந்தும் கொண்டு வரவில்லையே? அம்னோவோ, பெர்சத்துவோ, பாஸ் கட்சியோ எல்லாவற்றிற்கும் எந்த நாட்டில் இருந்தும் பயணிகளை கொண்டு வரவில்லையே? அரசாங்கமே கொண்டு வந்தும், கொண்டு வந்து கொண்டும் இருக்கிறது. இந்நிலையில் மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் மஇகா வசூல் செய்து கொண்டு வர வேண்டிய காரணம் என்ன? இதுதான் நிலை என்றால் அரசு எதற்கு என்று அவர் வினவினார்.
இன்று கூட தொழிலதிபர் பிரகதீஷ்குமார் விமான கட்டணத்தை ஏற்றார் என்று செய்தி வந்திருக்கிறது. அவரை நாம் வெகுவாக பாராட்டுவோம் . ஆனால், இந்த நிலை வேதனையாக உள்ளது.
கடந்த வாரம்கூட மாண்புமிகு குலசேகரன் பத்தாயிரம் வெள்ளி நன்கொடை என்பதையும் பார்த்தேன். அப்படி என்றால் பணம் தான் பிரச்சினையா? அரசாங்கம் பணம் தர மறுக்கிறதா என்பதை மஇகா விளக்க வேண்டும்.
மஇகா முனைப்பு காட்டி, இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்ட பயணிகளை மீட்டுவருவதை நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன். ஆனால் அதன் அமலாக்க நடைமுறையில் தவறு உள்ளது என்பதை முன்வைக்க விரும்புகிறேன். கடந்த காலங்களைப் போல மஇ கா இப்படியே உள்விவகாரங்களை மூடி மறைத்து தன்னுடைய சொந்த கட்டுப்பாட்டில் செயல் பட்டதால்தான் சமூக உரிமைப் பின்னடைவுகள் ஏற்பட்டன என்பதை உணர வேண்டும்.
கோவிட் 19 பிரச்சினை ஒரு புறம், மக்கள் பிரச்சினை ஒரு புறம். ஆனால் இரண்டு வாரம் கடந்தும் இன்னும் பணத்திற்காக கையேந்தும் நிலை ஏன்? மற்ற நாடுகளிலிருந்து மக்களை கொண்டு வந்த வேகத்தை ஏன் இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்கள் மீது காட்ட வில்லை என மக்கள் பரவலாக கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியாவில் மாட்டிக்கொண்ட பிரஜைகள் அனைவரும் இருவழி பயணச்சீட்டு வைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விமான நிறுவனங்களை அணுகி அந்தப் பயணிகளை கொண்டுவருவதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும். அல்லது மஇகா இதில் ஏற்பட்டுள்ள ‘உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்த வேண்டும்’ அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + fifteen =