அம்னோவின் முடிவை பக்காத்தான் ஏற்பதில் ஜசெகவுக்கு உடன்பாடு இல்லை

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை வலுவாக்க அதிலிருந்து விலகப் போவதில்லை என்று அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்ததை பிகேஆர் ஆதரித்துள்ளது.
பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் அதனை ஆதரிப்பதாகக் கூறியதை ஜசெக வரவேற்கவில்லை என்றும் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றும் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோவின் ஊழல் அரசை பல காலமாக ஜசெக எதிர்த்து, கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. சபா மாநில சட்டமன்றத் தேர்தலிலும் அதற்கு எதிராகவே ஜசெக போராடியது. ஊழல்வாதிகளான அமாட் ஸாஹிட் ஹமிடியும் நஜிப் ரசாக்கும் இருக்குவரை அம்னோவுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜசெக எடுத்து வந்துள்ளதாக குவான் எங் குறிப்பிட்டார்.
எங்கள் நோக்கமே ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டுமென்பதே. நிலைமை இவ்வாறு இருக்கையில் அம்னோவுடன் ஒத்துழைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறும்போது, சைஃபுடினின் கூற்றானது பிகேஆர் அம்னோவுடன் ஒத்துழைக்கும் என்று பொருள்படுமென்றும் அதற்குத் தாங்கள் உடன்படவில்லை என்றும் குவான் எங் தெரிவித்தார்.
செப்டம்பர் 23ஆம் தேதி, தமக்கு மலாய் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியதை தாங்கள் தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என்று எண்ணியதாகவும் அந்த முடிவை அன்வார் தன்னிச்சையாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பக்காத்தான் உறுப்புக் கட்சிகளிடையே அவர் அது பற்றிக் கலந்தாலோசிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சபா மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு 3 நாள்களுக்கு முன்னர் அறிவித்தது, கூட்டணிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளதாக குவான் எங் குறிப்பிட்டார்.
அவரது அறிவிப்பை விரும்பாத தால்தான் ஜசெவின் தலைவர்கள் அந்த அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 19 =