அம்னோதான் என் உயிர்மூச்சு

அம்னோதான் என் உயிர்மூச்சு, அக்கட்சிக்காக நான் தொடர்ந்து சேவையாற்றி வருவேன் என்று பழம்பெரும் அம்னோ தலைவரான தெங்கு ரஸாலி ஹம்சா சூளுரைத்துள்ளார். அண்மையில் 2021 பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தோல்வி கண்டு அதிகாரத்தை இழக்கும் என்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான தெங்கு ரஸாலியும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் ஒரே குரலில் அறிவித்திருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு விஷயத்தில் இதே போன்று ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயல்படுவது மிக அரிதாகும்.
ஆயினும், மூன்று வாக்குகள் வேறுபாட்டில் அந்த தேசிய வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
தெங்கு ரஸாலியின் அந்நடவடிக்கையை அம்னோ தலைவர்களும் அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும் ஒருசேர குறைகூறியதோடு அவரைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சினமுடன் கோரிக்கை விடுத்தனர்.
ஆயினும், அவருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பழுத்த அம்னோ அரசியல்வாதியான தெங்கு ரஸாலி ( வயது 83) கடந்த 1974ஆம் ஆண்டில் இருந்து கிளந்தானின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், மலேசியாகினி ஊடகத்திற்கு நேற்று அளித்த பேட்டியொன்றில், அம்னோவை விட்டு விலகும் திட்டம் ஏதும் தமக்கு இல்லை என்று அவர் தீர்க்கமாகக் கூறியுள்ளார்.
அம்னோவை விட்டு விலகும் சாத்தியம் உள்ளதா என்று அப்பேட்டியின்போது அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த தெங்கு ரஸாலி, எதற்காக நான் அம்னோவை விட்டு விலக வேண்டும்? அம்னோவுக்கு நான் மிகவும் நெருக்கமானவன். அதன் காரணமாகத்தான் நான் அம்னோவில் நான் தொடர்ந்து நீடித்து வருகிறேன் என்றார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செமாங்காட் 46 எனும் புதிய கட்சியைத் தொடங்குவதற்காக தாம் அம்னோவைக் கைவிட்டு சென்றதாக சில தரப்பினர் சுமத்திவரும் குற்றச்சாட்டையும் அம்னோ ஆலோசனை வாரியத்தின் தலைவருமான தெங்கு ரஸாலி நிராகரித்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டில் அம்னோவை நீதிமன்றம் தடை செய்த காரணத்தினால்தான் நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் யோசனையை அடிப்படையாகக் கொண்டு புதிய கட்சியொன்றைத் தொடங்க நான் முடிவு செய்தேன். டாக்டர் மகாதீர் தொடங்கிய அம்னோ பாரு கட்சியில் என்னையும் அம்னோவின் முன்னாள் உறுப்பினர்களையும் சேர்க்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதால்தான் செமாங்காட் 46 கட்சியை நான் தொடங்கினேன். அதன் பிறகு, அம்னோவுக்கு மீண்டும் திரும்புமாறு டாக்டர் மகாதீர் எங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்ததால் அக்கட்சியை நான் கலைத்தேன் என்றார் ரஸாலி.
அண்மைய காலமாக, நடப்புப் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக தெங்கு ரஸாலி குரல் எழுப்பி வருகிறார். அவரைப் பதவியிறக்கும் முயற்சியில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்குமாறு மக்களவை சபாநாயகர் அஸார் அஸிஸானுக்கு கடிதமொன்றையும் தெங்கு ரஸாலி அனுப்பினார்.
அடுத்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, அதனை முடிவு செய்யும் பொறுப்பை கட்சியிடமும் மக்களிடமும் விட்டு விடுவதாக நேற்றைய பேட்டியில் தெங்கு ரஸாலி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here