அபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்

அமீரகத்தில் சமீப நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை சற்று குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைந்து வருவது அதற்கு முக்கிய காரணமாகும்.


இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அபுதாபி, துபாயின் வானுயர்ந்த பல கட்டிடங்கள் பனிமூட்டத்தில் மறைந்தது போல காணப்பட்டது.

அபுதாபியில் அல் அஜ்பான் மற்றும் மதினத் ஜாயித் ஆகிய இடங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. குறிப்பாக மக்தூம் விமான நிலையம், அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேஷனல் சிட்டி மற்றும் லெபாப் ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் வெகு நேரம் காணப்பட்டது. பல்வேறு சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் தென்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்ல முடியாமல் திணறின. பல்வேறு சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

அந்த பகுதிகளில் பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. சாலையில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக துபாய், அபுதாபி சாலையில் செல்லும் வாகனங்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த இடைவெளியுடன் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.

மேலும் இன்றும், நாளையும் இதேபோன்ற வானிலை அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சாதாரணமாக நவம்பர் மாத தொடக்கத்தில் குளிர்கால வானிலை அமீரகத்தில் காணப்படும். தற்போது சற்று முன்னதாகவே வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =