அன்வார் மீது தேவையில்லாத விசாரணை ஏன்?

அன்வார் இப்ராஹிம் பிரதமராவது அவரின் உரிமையாகும். அதனை போலீசார் உட்பட எந்த சக்தியும் தடுப்பதில் நியாயம் இல்லையென பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் குறிப்பிட்டது அவரது உரிமையாகும். அந்தப் பட்டியலை போலீசார் கேட்பதற்கு எந்தத் தார்மீக உரிமையும் உண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்திய புக்கிட் அமான் போலீசார், அவர் மீது நூற்றுக்கும் அதிகமான புகார்களைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அந்நிய சட்டவிரோத தொழிலாளர்கள், சூதாட்ட மையங்களின் செயல்பாடு முதலியவற்றோடு அன்வார் பிரதமராவதற்கு ஆதரவளிக்கும் எம்பிக்களின் பட்டியலைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருப்பதாக ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேரரசரைக் கண்டு வந்த பின்னர், போலீசார் மிகவும் சுறு சுறுப்பாக அன்வார் மீது விசாரணை மேற்கொள்வது ஏன் என அவர் வினவினார். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எம்பிக்களின் பட்டியலுக்கும் போலீசாருக்கும் சம்பந்தம் இல்லை. அது அன்வாருக்கும் பேரரசருக்கும் இடையிலான விவகாரமாகும். போலீசார் அதில் தலையிடுவதற்கு எங்கிருந்து உரிமை வந்தது?
அன்வாரிடம் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, குற்றச் செயல்களை ஒடுக்க போலீசார் முனைய வேண்டும். அன்வார் சட்டத்துக்கு முரணாகச் செயல்படாத வரை அவர் மீது விசாரணை கூடாது என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.
அன்வார் பிரதமராகக் கூடாது என்று பல சக்திகள் தடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதை நாடே அறியும். அவர் பிரதமரானால் தங்களுக்கு ஆபத்தாக முடியுமோ என்று ஆளும் கூட்டணி நினைக்கிறதா?
இந்த விவகாரத்தில் போலீசார் நடுநிலையோடும் தொழில் நிபுணத்துவ ரீதியாகவும் செயல்பட வேண்டும். யாருக்கும் கைப்பாவையாக இருக்கக் கூடாதென்று ராமசாமி நினைவுறுத்தினார்.
தமக்கு ஆதரவு இருப்பதாக அன்வார் கூறாவிட்டால், அவர் எவ்வாறு நாட்டின் பிரதமராக முடியும்? அரசியலமைப்பு விதி அனுமதித்தவாறு அவரும் இந்நாட்டு குடிமகன்; எவரும் பிரதமராவதற்கு உரிமை உள்ளதையும் அதனைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்று பேராசிரியர் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =