அன்வார் நஜிப் இடையே நேரடி விவாதம் அடுத்த வியாழக்கிழமை நடைபெறுகிறது

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இடையே அடுத்த வாரம் வியாழக்கிழமை இரவு நேரடி விவாதம் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூரிலுள்ள மலேசிய சுற்றுலா மையத்தில் ( மாட்டிக்) இந்த விவாதம் நடைபெறும் என்று அவ்விரு தலைவர்களின் அதிகாரிகளும் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 12ஆம் தேதியன்று இரவு ஒன்பது மணிக்கு அந்த விவாதம் தொடங்கும் என்று அந்த அதிகாரிகள் கூறினர். ஆனால், எந்த விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ளனர் என்பதை அவர்கள் கோடிகாட்டவில்லை. அந்த விவாதம் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகும். அந்த ஊடகங்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அம்னோவின் முன்னாள் தலைவர் நஜிப்புக்கும் பிகேஆர் கட்சியின் நடப்புத் தலைவர் அன்வாருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி விவாதம் இதுவாகும்.
கடனில் மூழ்கியிருக்கும் எண்ணெய், எரிவாயு நிறுவனமான சபுரா எனெர்ஜி பெர்ஹாட் குறித்து அவ்விருவருக்கும் இடையே அண்மையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சபுரா எனெர்ஜி குறித்து தம்முடன் பொதுவிவாதம் நடத்தத் தயாரா என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி அண்மையில் நஜிப்புக்குச் சவால் விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்த நஜிப், பிகேஆர் தலைவரான அன்வாருடன் விவாதம் நடத்தவே தாம் விரும்புவதாக குறிப்பிட்டார். அச்சவாலை ஏற்றுக் கொள்வதாக அன்வார் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 10 =