பிகேஆர் கட்சியின் இரு உயர்நிலைத் தலைவர்களுக்கிடையே நடந்து வரும் பூசலுக்கு முடிவு கட்ட சமரச முயற்சியாக கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இருவரும் நேற்று நாடாளுமன்றத்தில் சந்திப்பு நடத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது பிகேஆர் தலைமைச் செயலாளரும் உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சருமான சைபுடின் நசுத்தியோன் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அன்வார் தமது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
நாடாளுமன்றத்தில் கட்சியின் துணைத் தலைவர், தலைமைச் செயலாளருடன் காப்பி அருந்துவதாக முகநூலில் அன்வார் குறிப்பிட்டார்.
சுமார் 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றதாக, அதை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
இருப்பினும் அன்வார் – அஸ்மின் எதைப்பற்றிப் பேசினார்கள் என்பது தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
அன்வார் – அஸ்மினுக்கிடையே நீண்டகாலமாக இருந்துவரும் விரிசல் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
கட்சித் தேர்தலில் அஸ்மினால் தோற்கடிக்கப்பட்டவர்களை கட்சித் தலைமைத்துவத்தில் அன்வார் நியமனம் செய்ததைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்தது.
கடந்த ஜூனில் அஸ்மினைத் தொடர்புபடுத்தி ஓர் ஆபாச காணொளி வைரலாகியது. பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் அந்த காணொளி தமது அரசியல் வாழ்க்கையை ஒழித்துக் கட்ட வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.