அன்வாரையே பிரதமர் வேட்பாளராக்குங்கள்… கல்விமான்கள் பரிந்துரை!

0

அன்வாருடன் ஒத்துழைக்க முடியாது என்று மறுத்துள்ள துன் மகாதீரை ஒதுக்கிவிட்டு, அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்க வேண்டுமென்று கல்விமான் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.
அன்வாரை ஆதரிப்பதே பக்காத்தான் ஹராப்பானுக்குச் சரியான முடிவாக இருக்குமென்றும் மகாதீருக்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கும் வேளையில், பிகேஆருக்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அஸ்மி ஹசான் தெரிவித்தார்.
நேற்று சின் சியூ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மகாதீர், தம்மோடு ஒத்துழைக்க அன்வார் மறுத்துள்ளதால் தாமும் அவரோடு ஒத்துழைக்கப் போவதில்லை என்றும், பிரதமராகத் தமக்கு வேறு வழிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவாளர்களைக் கொண்டுவர அன்வாரால் இயலாது என்பதால், மகாதீர் 6 மாத காலம் இடைக்காலப் பிரதமராக இருக்க வேண்டுமென்று பரிந்துரைத்த ஜசெகவும் அமானாவும் அப்பரிந்துரையை அன்வார் ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தன.
அப்பரிந்துரையை பிகேஆரின் உறுப்பினர்கள் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ள மறுத்து, அதனை நிராகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
அஸ்மி மேலும் கூறும்போது, அன்வாரில்லாமல் பக்காத்தான் ஹராப்பான் வலுவாக இயங்கவும் ஆட்சியைக் கைப்பற்றவும் முடியாது என்றும், அன்வாரின் உதவியின்றி போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் பக்காத்தான் ஹராப்பான் திரட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
பக்காத்தான் உறுப்புக் கட்சிகளிடையே பிரதமர் வேட்பாளர் பிரச்சினையானது முடிவில்லாமல் தொடர்ந்தால், முஹிடின் யாசினின் கை ஓங்க வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, நியூசிலாந்து, தாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் சின் கூறுகையில் இப்பிரச்சினை ஜசெக, அமானா ஆகிய கட்சிகளுக்குப் பெரும் சிக்கலை உருவாக்குமென்றும், அவர்கள் மகாதீரை புறக்கணித்து 15ஆவது பொதுத்தேர்தலில் கவனத்தைச் செலுத்தினால், அது முஹிடினுக்கு போதிய அவகாசத்தைக் கொடுத்து, தமது நிலையைத் தற்காத்துக் கொள்ள ஏதுவாக அமையும். அதோடு தமது கூட்டணியின் வலுவையும் அதிகரித்துக் கொள்ளவும் உதவும்.
அது அப்படியே நடக்குமானால், மகாதீர் பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தாவ சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். இறுதியில் பக்காத்தானின் அழிவிற்கே வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனினும், உறுப்புக் கட்சிகள் ஒரு முடிவுக்கு வர முடியாவிட்டால், அது 15ஆவது பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போகும் என்பதை பக்காத்தான் கூட்டணி உணர்ந்தே இருப்பதால், இப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காணும் என்று ஜேம்ஸ் சின் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் முகமட் இஸ்னி முகமட் ஸின் குறிப்பிடுகையில், அன்வாரிடம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், அவரின் உதவியில்லாமல் மகாதீர் மீண்டும் பிரதமராக வர இயலாது என்றும் அவர்களிருவருக்கும் மற்றொருவரின் உதவி மிகவும் முக்கியமென்றும் பிரதமர் வேட்பாளர்கள் பற்றிய மோதலை கைவிட்டு, பொதுத் தேர்தலுக்கு ஆயத்த நடவடிக்கை களை அவர்கள் மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =