அன்வாருக்கு பெரும்பான்மை இல்லை! ஆனாலும் உதவுகிறேன் – துன் மகாதீர்

0

அன்வார் இப்ராஹிமிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லையென்றாலும் அவருக்குத் தாம் உதவ முன்வருவதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பிரதமர் வேட்பாளராக வருவதை வாரிசான் சபா, பெர்சத்துவின் சிலர் மற்றும் கட்சி தாவ தயாராக இருக்கும் ஆளும் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட மகாதீர், அவர்களின் ஆதரவின்றி பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஹாங்காங் ஆசியா டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மகாதீர், அன்வாருக்குப் போதுமான ஆதரவு இல்லையென்றாலும் தாம் அவருக்கு உதவ முன்வருவதாகவும் குறிப்பிட்டார்.
உண்மையில், மூன்றாவது முறையாகப் பிரதமராவதற்கு தமக்கு விருப்பமில்லை என்றாலும், மக்களில் பெரும்பாலானோர் அப்பதவியில் தாம் அமர வேண்டுமென்று விரும்பிய தால்தான் அதற்கு முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.
நான் அக்கூட்டணியில் இருந்தால்தான் ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும், தவறினால் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாகவும் பலர் தம்மிடம் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆட்சியைக் கைப்பற்ற பக்காத்தான் ஹராப்பான் முயன்று வரும் வேளையில், பிரதமர் வேட்பாளர் யார் என்பது கேள்வி விஸ்வரூபம் எடுத்து, அக்கூட்டணியே சிதறும் அளவுக்குச் சென்றுள்ளது. அன்வாரே பிரதமர் வேட்பாளராக வேண்டுமென்று பிகேஆர் உறுதியாக இருக்கும்போது, தம்மை அப்பதவிக்கு ஆதரிக்காமல் போனால், தாம் கூட்டணியிலிருந்து விலகி, வேறு வாய்ப்புகளைத் தேடப் போவதாக, மகாதீர் செவ்வாய்க்கிழமை வரை கால அவகாசம் அளித்திருந்தார்.
மகாதீர் 6 மாத காலம் பிரதமர் பதவியை வகித்த பின்னர், அதனை அன்வாரிடம் ஒப்படைக்கும் பரிந்துரையை ஜசெகவும் அமானாவும் அன்வாரிடம் பரிந்துரைத்தன. எனினும், அன்வார் அதற்கு உடன்படவில்லை.
பேட்டியில் மேலும் பதிலளித்த மகாதீர், தாம் அஸ்மின் அலிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், அவர் தமது சொந்த முயற்சியில் மேல் நிலைக்கு வர வேண்டுமென்றே தாம் விரும்பியதாகவும் தெரிவித்தார்.
தாம் அஸ்மின் அலியுடன் அணுக்கமாக இருந்தாலும், அவர் தமக்குத் துரோகம் செய்து, பதவிக்காக முஹிடின் யாசினும் இணைந்தது பெரும் வருத்தத்தை அளித்திருப் பதாகவும் அவரின் செய்கையானது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் தாக்கல் செய்யவிருக்கும் முஹிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தால், பொதுத்தேர்தல் வரை காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
முஹிடின் பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்து, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து, ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவதை சுட்டிக்காட்டவே தம்முடைய நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமையும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =