அன்வாரின் அரசியலில் திருப்புமுனை அமையுமா?

மலேசிய அரசியல் உலகில் அன்வார் மிகப் பெரிய சக்தியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் விளங்கி வருவது உண்மையாகும். அன்வார் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது விவசாயிகளிடையே நீடித்த வறுமையை போக்குவதற்கு அரசியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டாக போராட்டத்தினை நடத்தினார். அது ஒரு பெரும் சர்ச்சையாக மாறி பின்னர் அரசின் கவனத்தைப் பெற்றது. பின்னர் அவர் அபிம் என்ற இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்று இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்றத் தலைவராக விளங்கினார். இவரது திறமையையும் புகழையையும் நன்கு அறிந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது அன்வாரை அம்னோ கட்சிக்குக் கொண்டு வந்து கட்சிக்கு வலு சேர்த்தார். அம்னோவில் இளைஞர் பகுதிக்கு தலைவராகப் பொறுப்பேற்றதுடன் அமைச்சரவையிலும் இடம் பெற்றார் அன்வார். பின்னர் அம்னோ கட்சியிலும் படிப்படியாக பலப் பதவிகளில் முன்னேறி இறுதியாக துணைத் தலைவர் பதவியில் அமர்ந்தார். அதே வேளையில் அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவியையும் கொடுத்து அழகு பார்த்தார் துன் மகாதீர் முகமது. அது மட்டுமல்லாது அன்வார் மலேசிய அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சுகளான கல்வி மற்றும் நிதித்துறைகளை மிகச் சிறப்பாக வழி நடத்திப் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால், திடீரென்று ஒரு நாள் துன் மகாதீர், அன்வார் அவர்களை அமைச்சரவையிலிருந்தும் அம்னோவிலிருந்தும் நீக்கினார். இது அன்வாரின் அரசியல் வளர்ச்சியில் மிகப் பெரிய சவாலாக அமைந்ததுடன் சரிவை நோக்கியே செல்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். அம்னோ கட்சியின் துணைத் தலைவராகவும் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் பதவி வகித்த அன்வார் நாட்டின் அடுத்த பிரதமராக வர வேண்டிய கால கட்டத்தில் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்டது நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்ததுடன் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அதே வேளையில் அன்வாரும் சோர்ந்து போகாமல் ‘மக்கள் நீதிக் கட்சி’ என்று ஒன்றினை அமைத்து மக்களின் ஆதரவினைப் பெற்றார். ஆனால் இந்தக் கட்சியின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் அன்வாரின் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனைகளுக்கு ஆளானார். அதே வேளையில் அன்வாரின் மனைவி மற்றும் மகளும் அன்வாரின் அரசியல் போராட்டத்தை வழி நடத்தித் தொடர்ந்தனர் என்றால் அது உண்மையாகும். நாட்டின் 14 வது பொதுத் தேர்தலின் போது ஒரு மிகப் பெரிய பிரளயம் போல எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ‘பக்காத்தான் ஹராப்பான்’ என்ற கூட்டணி அமைத்ததுடன் ‘மக்கள் நீதிக் கட்சி’யின் சின்னத்தில் தேசிய முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்டனர். இதில் ஆச்சரியமான சூழல் எதுவெனில் இதுகாறும் அம்னோ தலைவராக விளங்கி வந்த துன் மகாதீரும் அம்னோவிலிருந்து விலகி ஒரு தனிக்கட்சி அமைத்து எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதுதான். இந்த 14 ஆம் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றனர். இதன் வழி மீண்டும் துன் மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்றதுடன் அன்வாரின் துணைவியார் டத்தின் வான் அசீஸா துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதே வேளையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல்லினத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. மேலும் அன்வாருக்கு அரச மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று பேரரசரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆட்சியாளர் சம்மேளனத்தின் ஒப்புதலுடன் பேரரசர் அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர் சிறையிலிருந்து வெளி வருவதற்கு உதவினார். பின்னர் அன்வார் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பிரவேசித்தார். அதே வேளையில், அன்வாருக்கு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் பதவியைக் கொடுத்துவிடுவதாக துன் மகாதீர் முகமது வாக்குறுதி வழங்கினார். ஆனால், அவர் தனது வாக்குப்படி நடந்து கொள்ளாமல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடப்பதற்கு உதவினார். டான்ஸ்ரீ முஹிடின் மற்றும் அஸ்மீன் அலி தலைமையேற்று நடத்திய சதிராட்டத்தில் புதிய தேசியக் கூட்டணி ஆட்சி அமைந்தது. முன்பு அம்னோ கட்சியில் இரண்டாம் நிலையில் இருந்தும் துன் மகாதீர் முகமதுவால் பிரதமர் ஆக முடியாத அன்வார் மீண்டும் இந்த முறையும் சில தலைவர்களின் சதிராட்டத்தினால் பக்காத்தான் ஆட்சி உடைந்துவிட்ட நிலையில் அதே துன் மகாதீர் முகமதுவால் பிரதமர் ஆக முடியாமல் தள்ளப்பட்டார். ஆனால், அன்வார் இதனால் துவண்டுவிடவில்லை. மாறாக எதிர்க்கட்சித் தலைவராக மிகவும் சிறப்பாக செயல்படத் துவங்கினார். அதே வேளை அரசாங்கம் தனது பட்ஜெட்டை சமர்ப்பித்த வேளையில் அதற்கு ஊறு விளைவிக்காமல் அது நிறைவேற உதவினார். இது அவருடைய அரசியல் முதிர்ச்சியைக் காட்டியது. பின்னர் டான்ஸ்ரீ முஹிடின் அரசாங்கம் சரியான அணுகுமுறையைக் கையாளாததால் அம்னோ தன்னுடைய ஆதரவினை மீட்டுக் கொண்டது. இதனால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் இம்முறையும் அன்வாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்து சேர்ந்தது. ஆனால், பேரரசர் கேட்டுக் கொண்டபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்தபோது அன்வார் 105 பேருடைய ஆதரவினை மட்டுமே பெற்றார். எனவே இம்முறையும் எல்லாம் கூடி வந்த வேளையில் அன்வாருக்கு பிரதமர் பதவி கைநழுவிச் சென்றது. அதே வேளை அம்னோ தான் விட்டு விலகி வந்த தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடக்கின்ற நாடாளுமன்றக் கூட்டம் முழுமையாக அன்வாரின் கட்டுக்குள் இருப்பதை அறியமுடிகிறது. அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கின்ற அமைச்சர்கள் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதையும் மக்கள் பார்த்து விமர்சனம் செய்கின்றனர். அதே வேளையில் பல அமைச்சர்கள் பல வேளைகளில் நாடாளுமன்றத்தில் இருப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்த வண்ணமும் உள்ளன. அதே வேளையில் அரசு தீவிரமாக முடிவெடுக்க வேண்டிய பல குற்றச்சாட்டுகளையும் அன்வார் நாடாளுமன்றத்தில் முன் வைத்து வருகிறார். இதைப் பார்க்கின்ற வேளையில் அன்வாருக்கு மீண்டும் பிரதமர் பதவி வகிக்க திருப்புமுனை ஒன்று தோன்றும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =