அந்நியர்களுக்குக் கடை பட்டியலை வெளியிடுக!

பத்துமலை திருத்தலத்தில் நடத்தப்பட்ட தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வியாபாரிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்ட கடைகளின் மொத்தப் பட்டியலை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கடைகள் உண்மையிலேயே உள்ளூர் வியாபாரிகளுக்குத்தான் வாடகைக்கு கொடுக்கப்பட் டனவா அல்லது எல்லோரும் குற்றஞ்சாட்டுவதை போல அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா என்பதை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பத்துமலை திருத்தலத்தில் போடப்பட்டிருந்த தற்காலிகக் கடைகளில் சோதனை நடவடிக்கைக்காக வருகை புரிந்திருந்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அங்கு இந்திய நாட்டவர்களும், பாகிஸ்தான் நாட்டவர்களும் பெரும்பாலான கடைகளில் வியாபாரம் செய்கிறார்கள் என்று தகவல் கிடைத்துதான் வந்ததாக கூறுகிறார்கள்.
உண்மையிலேயே இந்த தற்காலிகக் கடைகள் அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்படவில்லை என்றால் சோதனைக்காக வருகை புரிந்த குடிநுழைவுத் துறை அதிகாரிகளை ஒரு தரப்பு முற்றுகையிட்டு அவர்கள் தங்கள் கடைமையைச் செய்ய விடாமல் தடுத்ததன் காரணம் என்ன? எனவே, பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழாவிற்காக எத்தனை கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. அவை அனைத்தும் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கான கட்டணமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டது. இந்த அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை பத்துமலை திருத்தலத்தை நிர்வகிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்குத்தான் இருக்கிறது.
உண்மையிலேயே அந்நிய நாட்டவர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றால் அன்றிரவு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளை அவர்கள் கடமையைச் செய்ய அனுமதித்திருக்கலாமே? எனவே ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திடமிருந்து கூடிய விரைவில் முழுமையான உண்மையான நியாயமான விளக்கத்தை எதிர்பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − seven =