
அந்நியத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதால், இதுபற்றி அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று கேட்டுக் கொண்டது.அந்நியத் தொழிலாளர்களைச் சேர்க்கின்ற ’இபிஏஏஎக்ஸ் என்ற இரண்டாவது கட்ட ஆன்லைன் முறையை அரசாங்கம் தொடங்கக்கூடும் என்று தெரிகிறது. இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது என எம்டியூசி தலைமைச் செயலாளர் ஜே.சோலமன் கூறினார்.சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் போதுமான தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பதை முதலாளிகள் கண்டறிய இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இதற்கு 30 கோடி வெள்ளியா என்று அவர் வினவினார்.
அந்நியத் தொழிலாளர்கள் மீதான அறிக்கை ஒன்று உள்துறை, மனிதவள அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பரிந்துரைகளுக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த ஆட்சியில் அந்நியத் தொழிலாளர் சேர்ப்பு விஷயத்தில் ஏராளமான அதிகார துஷ்பிரயோகங்கள் நடந்தன என்று கூறப்பட்டது. இந்த ஆட்சியிலும் அது நடக்காமல் இருக்க அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
ஆள்கடத்தல் உட்பட அந்நியத் தொழிலாளர் விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்ய இந்த விசாரணை உதவும் என்று சோலமன் குறிப்பிட்டார்.