மலேசியாவில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்களின் நலனும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்நியத் தொழிலாளர்கள் பலர் முறையாக ஊதியம் கிடைக்காமலும் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிப்படுவதாகவும், சில சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் வெளிவரும் செய்திகள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயக்கம் ஒன்றைத் துவங்குவது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் முதலாளிமார்களால் தாங்கள் மிரட்டப்படுவதாக பாதிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க விவரிக்கும் பல காணொளித் தொகுப்புகளை அவ்வப்போது காண நேரிடுகிறது என்றும், சமூக வலைத்தளங்களில் இத்தகைய காணொளிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும் டத்தோ முருகையா சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நமது தொப்புள்கொடி உறவுகளான அவர்களின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கும் உள்ளது.
அண்மையிலும் கூட பணி செய்யும் இடத்தில் தாங்கள் முதலாளி தரப்பால் தாக்கப்பட்டதாகவும், கடந்த சில மாதங்களாக ஊதியமே தரப்படவில்லை என்றும் சோகத்துடன் இரு தொழிலாளர்கள் விவரிக்கும் காணொளியைக் காண நேர்ந்தது. அவர்களது கடப்பிதழை முதலாளி தரப்பு பறித்துக் கொள்வதால் ஊர் திரும்பவும் வழியில்லை,” என்று டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தஞ்சம் புகும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு இங்கு வேலை செய்யும் உரிமையை வழங்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தங்களது வேலைக்கான பர்மிட்டுக்கு பணம் செலுத்தி மலேசியா வரும் அந்நியத் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
தங்களது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, மலேசியாவில் வேலை பார்ப்பதற்கு முகவர்களிடம் ஐந்தாயிரம் ரிங்கிட் தொகையை கொடுத்து இங்கு வருகிறார்கள் தமிழகத் தொழிலாளர்கள்.
நம் தொப்புள்கொடி உறவுகள் மலேசியாவில் ஏமாற்றப்பட்டு, தாக்கப்பட்டு அவதிப்படுவதை தடுக்காவிட்டால், பின்னர் தாய் தமிழகத்தில் உள்ள நமது உறவுகளை எதிர்கொள்ளவும், தொப்புள்கொடி உறவு என்று கூறிக் கொள்ளவும் அருகதையற்றவர்களாகி விடுவோம்,” என்று டத்தோ முருகையா கூறியுள்ளார்.