அநீதி என்று பதிவிட்டதற்காக போலீஸ் விசாரணைக்குத் தயார்

எஸ்.ஆர்.சி. எனப்படும் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெ.4 கோடியே 20 லட்சம் நிதியை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நீதிபதி முகமட் நஸ்லான் தனது தீர்ப்பில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டுச் சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்தார்.
தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜிப் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அநீதி என்று டுவிட்டரில் பதிவிட்டதற்காக தம் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட்டால் அதனை சந்திக்கத் தயாராக இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
நான் பதிவிட்ட டுவிட்டர் அல்லது இதர தரப்பினர் செய்திருந்த டுவிட்டர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை என நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறினார்.
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன்தான். விசாரணைக்கு போலீஸ் அழைத்தால் வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக சபா பத்து சாப்பி வாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர் லியூ வெய்ன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
டுவிட்டரில் பதிவு செய்த அமைச்சரின் பெயரை பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர் லியூ வெய்ன் கியோங் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஒருவர் டுவிட்டர் செய்திருந்தார். இந்த அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மட்டுமே அவர் கேள்வி எழுப்பினார்.
அநீதியை தடுப்பதற்கு நாங்கள் அதிகாரமின்றி இருந்தோம் என்று அமைச்சர் ஒருவர் பதிவு செய்திருந்ததாக லியூ வெய் கியோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
டத்தோஸ்ரீ நஜீப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் அவரது வீட்டிற்கு பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் மற்றும் இதர தலைவர்கள் சென்றது வழக்கமான ஒன்று என்று தக்கியுடின் குறிப்பிட்டார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதல் முறையாக நீதிமன்றத் தண்டனைக்கு உள்ளான போது அவரை அப்போதைய பாஸ் தலைவர் பாட்ஷிர் நோர் சந்தித்ததையும் தக்கியுடின் ஹசான் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =