அதிக வருமானம் பெறும் அமைச்சர்களில் முதல் இடத்தை பிடித்தார் டத்தோஸ்ரீ சரவணன்

நாட்டின் ஆளுங்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்கள் சொத்துகள், மாத வருமானம் போன்ற விவரங்களை ‘எம்ஏசிசி’ எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி இதுவரை சொத்து விவரங்களை சமர்ப்பித்தவர்களில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், மாதம் 104,000 வெள்ளி பெறுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ஆகக் கடைசியாகச் சமர்ப்பிக்கப்பட்ட வருமானக் கணக்கில் அமைச்சரவையில் உள்ள ஒரே இந்தியரான மஇகா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
மனிதவள அமைச்சரான அவரின் மாத வருமானம் 143,628.55 வெள்ளி ஆகும். கடந்த ஜூலை 22ஆம் தேதி வரை இப்பட்டியலில் பிரதமரே முதல் இடத்தில் இருந்தார். அதன் பின் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி கிடைக்கப்பெற்ற அறிக்கையின் படி தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் முதல் இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இப்பட்டியலில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எட்மன்ட் சந்தாரா, மாதம் 50,347.65 வெள்ளி பெறுவதாக பட்டியலிட்டுள்ளார்.
இந்தத் தகவல் எம்ஏசிசி அகப்பக்கத்தில் இருந்ததை மலாய் மெயில் நாளிதழ் இணையச் செய்தி வழி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =