அசத்தும் அனுராதா: விஞ்ஞானி டூ ஜெர்மனி கேப்டன்

ஜெர்மனி பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக அசத்துகிறார் அனுராதா. பெங்களூருவின் பசவங்குடியை சேர்ந்தவர் அனுராதா தோதாபல்லபுர் 34. வேகப்பந்து வீச்சாளரான இவர், கர்நாடக அணிக்காக 19 வயது அணியில் விளையாடியுள்ளார். 2008இல் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் பெரியளவு வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இதனால் மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக இங்கிலாந்து கவுன்டி அணியில் விளையாடினார். பிஎச்டி படிப்புக்காக 2011இல் ஜெர்மனி சென்றார். இங்குள்ள மேக்ஸ் பிளான்க் மையத்தில் தற்போது இருதய, நுரையீரல் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். ஜெர்மனியில் 2015ல் பெண்கள் அணியை துவக்கினார். வீராங்கனைகள் கிடைப்பது சிரமமாக இருந்தது. பின் இவரே பயிற்சி கொடுத்து 8 மாதத்தில் அணியை களமிறக்கினார். தற்போது ஜெர்மனி அணியின் கேப்டனாக உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரியா சென்ற ஜெர்மனி, ஐந்து போட்டிகள் கொண்ட அனைத்துலக ‘டி–20’ தொடரை முழுமையாக (5–0) வென்றது. இதன் நான்காவது போட்டியில் அசத்திய அனுராதா, பெண்கள் ‘டி–20’ அரங்கில் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனை படைத்தார். 3 ஓவர் பந்து வீசிய இவர், 1 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 18 போட்டிகளில் விளையாடிய இவர் கூறுகையில்,‘‘இந்திய பெண்கள் கிரிக்கெட் இப்போது உச்சத்தில் உள்ளது. இது போல அப்போது இருந்திருந்தால் மேல் படிப்பு குறித்து முடிவு செய்ய அதிக நேரம் எடுத்திருப்பேன். ஜெர்மனி சென்ற போது துவக்கத்தில் ஆண்கள் அணியில் பந்து வீசியதை பார்த்து, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். கென்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாட்டை சேர்ந்தவர்கள் ஜெர்மனி அணியில் தற்போது இடம் பெற்றுள்ளனர். அறிவியலில் பரிசோதனை செய்யும் போது சரியான முடிவு கிடைக்க பல மாதங்கள், ஆண்டுகள் ஆகலாம். பலமுறை தோற்றாலும், கடைசியில் வெற்றி கிடைக்கும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதுபோல, உடனடியாக எங்கள் அணிக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து முயற்சிப்போம் இவ்வாறு அனுராதா கூறினார். அனைத்துலக‘டி–20’ அரங்கில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (எதிர்–அயர்லாந்து, 2019), இலங்கையின் மலிங்காவுக்கு (எதிர்–நியூசி., 2019) அடுத்து, 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பவுலர் அனுராதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + thirteen =